search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அரசு பணியாளர்"

    கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு தமிழக அரசு பணியாளர்கள் ஒரு நாள் சம்பளம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. #KeralaFlood
    சென்னை:

    கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அதன் நிவாரணத்துக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஏற்கனவே ஒரு நாள் சம்பளம் வழங்கி இருக்கின்றனர். அதற்கான அரசாணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் சம்பளத்தை அந்த மாநிலத்தின் மறுவாழ்வு பணிகளுக்காக வழங்கியுள்ளனர். அதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-



    கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை, கடுமையான இயற்கை பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே சில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தில் இருந்து, கேரள நிவாரணத்துக்காக ஒரு நாள் சம்பளத்தை அளிக்கலாம் என்று விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

    இதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. தானாக முன்வந்து அளிக்கப்பட்ட அந்த தொகையை ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தை எழுத்து மூலம், சம்பளம் வழங்கும் அதிகாரியிடம் அளிக்கவேண்டும்.

    அந்த தொகை, கேரள முதல்-மந்திரி நிவாரண நிதிக்கணக்கை கையாளும் திருவனந்தபுரம் எஸ்.பி.ஐ. வங்கி கிளையில் நேரடியாக பற்று வைக்கப்பட்டுவிடும்.

    அரசின் இதற்கான உத்தரவு, உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், வாரியங்கள், அரசு கழகங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் ஊழியர்களுக்கும் பொருந்தும். தானாக முன்வந்து இந்த உதவி அளிக்கப்படுவதை, சம்பளபட்டுவாடா அதிகாரி உறுதி செய்யவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் வழங்க முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  #KeralaFlood
    ×